சண்டிகர்: அழுக்கான படுக்கையில் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை படுக்க வைத்த பஞ்சாப் மாநில அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜாவுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. அதே நேரத்தில் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சேத்தன்சிங் ஜோரம்ஜா. இவர் நேற்றுமுன்தினம் சண்டிகர் அருகிலுள்ளஃபரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த படுக்கைகள் சுகாதாரமற்றவையாகவும், சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் துணைவேந்தர் ராஜ்பகதூரிடம், அமைச்சர் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து துணைவேந்தர் டாக்டர் ராஜ்பகதூரை அங்கிருந்த நோயாளியின் படுக்கையில் படுக்குமாறு அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜா நிர்பந்தித்தார்.
அந்தப் படுக்கை மிகவும் அழுக்காக இருந்தது. ஆனால், அமைச்சரின் நிர்பந்தம் காரணமாக துணைவேந்தர் ராஜ்பகதூர் சில விநாடிகள் படுக்கையில் படுத்துவிட்டு எழுந்தார். இந்த வீடியோ டி.வி., சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாயின. இதைத் தொடர்ந்து துணைவேந்தர் டாக்டர் ராஜ்பகதூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சுகாதார அமைச்சர் சேத்தன் சிங்கையும், ஆம் ஆத்மி கட்சியையும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதனிடையே, இந்த சம்பவத்துக்குக் காரணமான பஞ்சாப் அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன்குமார் பன்சால் தனது ட்விட்டரில் கூறும்போது, “மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் இதுபோன்ற அடாவடி அமைச்சர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. அவர் நேரடியாக வேந்தருக்கு பதில் சொல்ல மட்டுமே பொறுப்பு கொண்டிருக்கிறார். அமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.
மாநில பாஜகவின் மூத்த தலைவர் மன்ஜீந்தர் சிங் கூறும்போது, “பஞ்சாப் சுகாதார அமைச்சரின் செயல் அருவருப்பானது. அவர் பல்கலைக்கழக துணைவேந்தரை அவமதிப்பு செய்துவிட்டார். கல்வி அறிவு இல்லாத அமைச்சர் எப்படி நடந்துகொள்வார் என்பதை நிரூபித்துவிட்டார்” என்றார். பஞ்சாப் சுகாதார அமைச்சரின் இந்தச் செயல் அந்த மாநிலத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.