கொல்கத்தா: ஆசிரியர்கள் நியமனம் முறைகேடு வழக்கில் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான பார்தா சட்டர்ஜி கைதான நிலையில், அமைச்சரவையையும், கட்சியையும் மாற்றி அமைக்க மம்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக, அம்மாநில அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி, அவருடைய உதவியாளரும், தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அர்பிதாவின் பல வீடுகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பல சோதனைகளில் ரூ.49 கோடி பணம், 6 கிலோ தங்கம் சிக்கியுள்ளன மேலும், அர்பிதா வீட்டில் இருந்து பல கோடி பணத்துடன் மாயமான 4 கார்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதையடுத்து, சட்டர்ஜியின் அமைச்சர் பதவியை பறித்த மம்தா, கட்சியில் இருந்தும் நீக்கினார். சட்டர்ஜி விவகாரத்தால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதை மம்தா விரும்பவில்லை. எனவே, அமைச்சரவையிலும், கட்சியிலும் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஒரு நபர், ஒரு பதவி’ என்ற அடிப்படையில் கட்சியில் மாற்றம் செய்யப்படும் என்றும், சாட்டர்ஜி வகித்த பொதுச்செயலாளர் போன்ற சில பதவிகள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. * அர்பிதா வங்கி கணக்கில் மேலும் ரூ.2 கோடி சிக்கியது அர்பிதாவின் வீட்டில் ரூ.49 கோடி பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய 3 வங்கி கணக்குகளையும் முடக்கும் நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்துள்ளது. இந்த கணக்குகளில் ரூ.2 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.