கொழும்பு:இலங்கை அம்பந்தோட்டை துறைமுகத்தில், சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவலை, இலங்கை ராணுவம் உறுதி செய்தது.
நம் அண்டை நாடான சீனாவின் உளவு கப்பல், இலங்கை துறைமுகத்துக்கு விரைவில் வரப் போவதாக, சமீபத்தில் செய்தி வெளியானது. நம் நாட்டின் கடலோர மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவை உளவு பார்ப்பதற்காக, இந்தக் கப்பல் அனுப்பப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உஷாராக இருக்கும்படி, இந்த மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், சீன கப்பலின் வருகையை, இலங்கை ராணுவம் உறுதி செய்தது. இது குறித்து, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கேணல் நளின் ஹெராத் கூறியதாவது:
இலங்கை கடற்பரப்பை கடந்து செல்ல, பல நாடுகளின் வர்த்தக மற்றும் ராணுவ கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே போல், சீனாவின் ‘யுவான் வாங் – 5’ என்ற ஆராய்ச்சிக் கப்பலை, இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தில், ஆக., 11 – 17 வரை நிறுத்தி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல், செயற்கைக்கோள் கட்டுப்பாடு குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement