தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஒலிம்பியாட் நடைபெறும் பூஞ்சேரி நட்சத்திர விடுதிக்கு வந்து பாலஸ்தீன சிறுமியிடம் ’எங்கள் ஊர் உங்களுக்கு பிடித்துள்ளதா?’ என கேட்டறிந்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூன்றாவது சுற்று இன்று நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச வீரர்களை நேரில் சந்தித்து ஏற்பாடுகள் குறித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிய இன்று மாலை 6 மணிக்கு பூஞ்சேரி நட்சத்திர விடுதிக்கு முதல்வர் வருகை தந்தார்.
முதல்வர் ஸ்டாலினை சர்வதேச செஸ் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். தனது வாகனத்தை விட்டு இறங்கியவுடன் பாலஸ்தீன இளம் வீராங்கனையான ராண்டா சேடரை சந்தித்த அவர், தங்கும் இடம் எவ்வாறு உள்ளது ? எங்கள் ஊர் உங்களுக்கு பிடித்துள்ளதா என கேட்டறிந்தார்.
பின்னர் போட்டி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கத்திற்கு சென்ற அவர், இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பரத்சிங் சவுகான் மற்றும் ஒலிம்பியாட் குழுவின் தலைமை அதிகாரி தரேஸ் அகமது ஆகியோரிடம் ஏற்பாடுகள் குறித்தும் போட்டி நடைபெறுவது குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து மூன்றாவது சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்களையும் அதிலும் முக்கியமாக தமிழக வீரர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM