திருத்துறைப்பூண்டி அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மனைவி அமுதா (33). இவர் துணி விற்பனை, அழகு நிலையம் மற்றும் மளிகை பொருள்கள் விற்பனை செய்துவருகிறார். இவரது கணவர் மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், அமுதா தொழில் மேம்பாட்டிற்காக திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிலரிடம் ரூ.18 லட்சம் பெற்று வட்டி செலுத்தி வந்துள்ளார்.
தான் பெற்ற கடனுக்காக இதுவரை ரூ.80 லட்சம் பணம், 50 பவுன் நகைகள் கொடுத்தப் பிறகும், வட்டி கேட்டு கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதாக அமுதா கூறுகிறார்.
வட்டிக் கொடுமையால் அச்சமடைந்த அமுதா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அங்கு அவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அமுதா கூறியபோது, பெற்ற கடனைவிட அதிகமாக பணம் கொடுத்த பிறகும் தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டுகின்றனர். எனக்கு பயத்துடன் வாழ முடியவில்லை. கந்துவட்டி கேட்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM