அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளான சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், “என் உயிரே போனாலும் நான் சிவசேனாவை விட்டு போக மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று (ஞாயிறு) காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் சஞ்சய் ரவுத் வீட்டிற்கே சென்று விசாரணையை ஆரம்பித்தனர். ஏற்கெனவே அவருக்கு ஜூலை 20, 27 தேதிகளில் அனுப்பப்பட்டிருந்த சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகாத நிலையில் அவரது வீட்டிற்கே இன்று அமலாக்கத் துறை அதிகரிகள் சென்றனர்.
இது குறித்து சஞ்சய் ரவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் மராட்டிய மொழியில் ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், “எனக்கு எந்த ஊழலிலும் தொடர்பு இல்லை. நான் இதை சிவ சேனா தலைவர் பால் தாக்கரே மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நான் சிவ சேனாவுக்காக தொடர்ந்து போராடுவேன். என் உயிர் போகும் நிலை வந்தாலும் கூட கட்சியை விட்டு நீங்க மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ராம் கதம், “சேனா தலைவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் சஞ்சய் ரவுத் ஏன் அஞ்சுகிறார். அவர் குற்றமற்றவர் என்றால் இரண்டு சம்மன்கள் அனுப்பப்பட்ட போதே ஆஜராகி இருக்கலாம் அல்லவா? பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்க முடிந்த அவருக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏன் போக நேரமில்லை” என்று வினவியுள்ளார்.
மும்பையில் உள்ள பிரபல சாவடியை மறுசீரமைப்பு செய்ததில் ஊழல் நடந்ததாக அமலாக்கத் துறை அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜூலை 1 ஆம் தேதி விசாரணையில் சஞ்சய் ரவுத் ஆஜரானார். மற்ற சம்மன்களை அமலாக்கத் துறை விசாரணையை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதைக் காரணம் காட்டி புறக்கணித்தார். இந்நிலையில் சஞ்சய் ரவுத் வீட்டிலேயே இன்று விசாரணை நடத்தப்பட்டது.