நியூயார்க்,
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வானில் எரிகற்கள் மழை பொழிவது போன்ற காட்சிகள் ஏற்பட்டன. இதனால், மக்கள் ஆச்சரியமடைந்தனர். ஆனால், அது சீன ராக்கெட்டின் மீதமுள்ள கழிவுகள் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி சீன விண்வெளி கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 23 டன் எடை கொண்ட, மார்ச்-5பி ஒய் 3 என்ற ராக்கெட் கடந்த 24ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது என தெரிவித்து உள்ளது.
சீன ராக்கெட்டின் கழிவுகள், இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது. அவை, இரவு நேரத்தில் பூமிக்குள் திரும்பி விழும்போது, எரிகற்கள் மழை பொழிவது போன்ற காட்சிகள் ஏற்பட்டன. இதனை கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதி மக்கள் தெளிவாக காண முடிந்தது.
அவர்களில் சிலர், அதனை வீடியோவாக படம் பிடித்து பகிர்ந்து உள்ளனர். சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் என பல வண்ணங்களில் இரவு நேரத்தில் எரிந்து கொண்டே பூமிக்கு திரும்பியது வாணவேடிக்கை போன்றும் காணப்பட்டது.
இந்த சீன ராக்கெட்டானது, மலேசியாவின் வான்பரப்பில் எரிந்துள்ளது போல் தெரிகிறது என நாசா தெரிவித்து உள்ளது. எனினும், இந்த ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் பூமிக்கு திரும்பி வரும்போது, பாதுகாப்பு நடைமுறைகளை சீனா கடைப்பிடிக்கவில்லை என நாசா கடுமையாக சாடியுள்ளது.
நாசா நிர்வாகியான பில் நெல்சன் கூறும்போது, விண்வெளி பணியில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் சிறந்த பழக்கங்களுக்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுபோன்ற தகவல்களை முன்கூட்டியே பகிர வேண்டும்.
இதனால், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு இழப்பு ஏற்படுத்த கூடிய, அதிக ஆபத்து நிறைந்த, இதுபோன்ற அதிக எடை கொண்ட ராகெட்டுகளின் கழிவுகள் எங்கு விழுகின்றன என முன்பே கணிக்க முடியும்.
விண்வெளி பயன்பாட்டில் பொறுப்புடன் இருக்க வேண்டியது என்பது மிக முக்கியம். அதனால், பூமியில் வாழும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.