திருமலை: ஆந்திராவில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோ எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமைச்சர் ரோஜா இடம் பிடித்துள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவையில் பிரபல நடிகை ரோஜா, சுற்றுலா, இளைஞர் நல மேம்பாடு துறை அமைச்சராக இருக்கிறார். நகரி தொகுதி எம்எல்ஏ.வான இவர், ‘வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்’ என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம் பெற்றுள்ளார். அது எப்படி தெரியுமா? விஜயவாடாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நேற்று அவர் தோன்றினார். அவரை சுற்றிலும் 3 ஆயிரம் கேமராக்களுடன் போட்டோகிராபர்கள் நிறுத்தப்பட்டனர். ரோஜா மேடையில் நின்றதும், எல்லா போட்டோகிராபர்களும் ஒரே நேரத்தில் கிளிக் செய்து அவரை போட்டோ எடுத்தனர். உலகில் இதுவரை எந்தவொரு பெண் அமைச்சரையும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் ஒரே கிளிக்கில் போட்டோ எடுத்ததில்லை. இதுதான், கின்னஸ் புத்தகத்தில் ரோஜாவின் பெயரை இடம் பெற செய்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றும் அவரிடம் வழங்கப்பட்டது.