புதுச்சேரியில் ஜப்தி செய்த வீட்டின் உள்ளே முதியவர்களை வைத்து சீல் வைத்த வங்கி அதிகாரிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை புளோஸ் கார்மேல் தெருவைச் சேர்ந்தவர் துரை (எ) மாணிக்கவாசகம். இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவி பிள்ளைகளுடன் தனக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில், பில்டிங் காண்டராக்ட் தொழில் செய்து வரும் இவர், ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடனிற்கான தவணையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இவர் கடன் பெற்றிருந்த தனியார் வங்கியை, வேறொரு தனியார் வங்கி வாங்கியது. புதிய நிர்வாகம் தவணைத் தொகையை கேட்டதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றதை அடுத்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனிற்காக துரையின் சொத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிகிறது. அந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் வங்கி ஊழியர்கள் துரையின் வீட்டிற்குச் சென்று பூட்டி சீல் வைத்தனர்.
அப்போது வீட்டிற்குள் யாரும் இருக்கின்றார்களா? என்று முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் வீட்டிற்குள் இருந்த துரையின் வயதான பெற்றோரை வீட்டிற்குள்ளேயே வைத்து சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முதியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM