ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த வாலிபரின் வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்நகரிலுள்ள சௌபாஸ்னி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் 36 வயதான வாலிபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றுவலிக்கான காரணம் குறித்து கண்டறிய இளைஞருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அதில் அவரது வயிற்றில் நாணயங்களின் குவியலை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மன அழுத்தத்தில் இருந்த போது 10-15 நாணயங்களை உட்கொண்டு விட்டதாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தேவையான கருவிகளை ஏற்பாடு செய்து வயிற்றிலிருந்து நாணயங்களை அகற்றும் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் துவங்கினர். 2 நாட்கள் வரை நீடித்த அறுவை சிகிச்சையின் முடிவில் 63 நாணயங்களை அவரது வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதில் பெரும்பாலானவை ஒரு ரூபாய் நாணயங்கள் ஆகும். தற்போது அந்த வாலிபர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அம்மருத்துவமனையில் குடலியல் நிபுணராக பணியாற்றும் நரேந்திர பார்கவ், “கடும் மன உளைச்சலில் இருக்கும்போது சிலர் விநோதமான விஷயங்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு தகுந்த மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். ஆதலால் அந்த வாலிபருக்கு மனநல சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM