கரூர்: விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் 21 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும், மின்கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்பனபோன்ற எழுத்துமூலம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட சம்யுக்தா கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 31) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுயஆட்சி இந்தியா தேசிய தலைவர் கிறிஸ்டினா, கரூர் மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி, தமிழக விவசாய சங்கமாவட்ட துணைத்தலைவர் நடேசன், சுவாதி பெண்கள் இயக்க பொருளாளர் மஞ்சுளா, கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவன அமைப்பாளர் ராமசாமி, மக்கள் அதிகாரம் அமைப்பாளர் சக்திவேல் போராட்ட உரையாற்றினர். தலித் மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் கரிகாலன் நன்றி கூறினார்.
சுயஆட்சி இந்தியா, மக்கள் அதிகாரம், வாழ்க விவசாயி சங்கம், சாமானிய மக்கள் நலக்கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 10 பெண்கள் உள்ளிட்ட 21 பேரை கரூர் நகர டிஎஸ்பி (பொ) முத்தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் செந்தூர்பாண்டியன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கைது செய்தனர்.