சேலம்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களில் 907 பேர், வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்துக்கு நேற்று வந்தார். ஏற்காட்டில் உள்ள புளியங்கடை, நாராயணதாதனூர், செங்கரடு ஆகியவற்றில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
பின்னர், சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 2,500 பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் நிலை உள்ளது. பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் 18 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டு மரத்தடியில் கல்வி பயிலும் பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் கட்டிடம் கட்டித்தரப்படும்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டு, 81 சதவீதம் மாணவர்கள் படித்து வருகின்றனர். 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளியின் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் வகுப்புகளைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியின் கட்டிட உறுதித்தன்மை அறிந்த பின்னர், அங்கு வகுப்புகளை தொடங்குவது குறித்து தீர்மானிக்கப்படும். கலவரத்தால் பாதித்த பள்ளியில் பயின்ற மாணவர்கள், அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 907 மாணவர்கள், வேறு பள்ளியில் சேர விண்ணப்பம் தந்துள்ளனர்.
மாணவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை மேம்படுத்த மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா 2 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். கரோனா காலத்துக்குப் பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க திரைப்படம், பாரம்பரிய கலை பண்பாட்டு கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்துக்கான பணிகளை செயல்படுத்திட ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதனிடையே, ஏற்காடு மலைக்கிராமங்களில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக இடிக்க அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், 3 பள்ளிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் தலா 2 வகுப்பறைகள் கட்ட நிர்வாக அனுமதி ஆணையை அமைச்சர் வழங்கினார்.