புதுடெல்லி: கார்கில், டிராஸ் செக்டாரில் உள்ள 5140வது முனைக்கு, ‘துப்பாக்கி மலை’ என்று ராணுவம் பெயர் சூட்டியுள்ளது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘கடந்த 1996ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு எதிரி துருப்புக்கள் மற்றும் 5140வது முனை உட்பட அவர்களின் பிடியில் இருந்த பாதுகாப்பு நிலைகளில் கடும் தாக்குதல் நடத்தியது. இது, கார்கிலில் போரை விரைவாக முடிப்பதற்கான முக்கிய காரணியாக அமைந்தது. இதன் நினைவாக, இந்த 5140வது முனைக்கு, ஆபரேஷன் விஜய்யில் பங்கேற்ற வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ‘துப்பாக்கி மலை’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது,’’ என்றார். இந்நிலையில், கார்கில் போர் நினைவிடத்தில் விழா நடந்தது. இந்த விழாவில் பீரங்கிப் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.கே.சாவ்லா, பயர் அண்ட் ப்யூரி படை பிரிவு தலைமை அதிகாரி லெப். ஜெனரல் அனிந்தியா சென்குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டு போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.