நேற்று தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டதாக வந்த செய்தி உண்மை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 7ஆம் தேதி, கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகே அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பலர் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வுக்கு பின்னர் செய்திகளிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நான்கு வகையான மாரத்தன் போட்டி நடைபெற உள்ளது. முதலாவதாக ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கான போட்டியை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
10 கிலோமீட்டருக்கான மாரத்தான் போட்டியை அமைச்சர் கே.என்.நேருவும், 21 கிலோமீட்டருக்கான மாரத்தான் போட்டியை அமைச்சர் எ.வ.வேலுவும், 42 கிலோமீட்டருக்கான மாரத்தான் போட்டியை அமைச்சர் மெய்யநாதனும் தொடங்கி வைக்கின்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியானது பெசன்ட் நகர் கடற்கரையிலிருந்து மாநில கல்லூரி வரை நடைபெற உள்ளது. சென்னை மக்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் நடைபெற உள்ளது. மதுரையில் பெய்த கனமழை பாதிப்பு குறித்து வருவாய்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் வடிந்த பின்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் நாங்களே ஊடக நண்பர்களை அழைத்து கூறுவோம். தற்போதைக்கு தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறோம். இதை போல திருச்சி, மதுரை, கோவையிலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டதாக வந்த செய்தி உண்மை இல்லை” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM