ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்துகொண்டதால், அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பெரும் தொகையை இழந்த சிலர், நெருக்கடிக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைன் ரம்மியால் அதிகரித்து வரும் தற்கொலைகளால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கலாமா என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைப்பட்டு தற்போது அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதே நேரத்தில், அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தற்போது வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லாததால், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துகொள்வது நடைபெற்று வருகிறது.
அண்மையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்சம் பணத்தை இழந்ததற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில்தான், ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் தமிழகத்தில் தமன்னா, மனோபாலா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைனில் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள்.
சினிமா நடிகர்களாக இருந்தாலும் சமூகத்தையும் மக்களையும் பாதிக்கும் ஒரு விளையாட்டில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கக்கூடாது என்று சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒரு தொழில்முறை நடிகர்களாக இருக்கலாம். ஆனால், சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். இதற்கு சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதனால், இவருக்கு கூடுதல் சமூக பொறுப்பு இருக்கிறது இல்லையா என்று சமூக ஊடகப் பயனர்கள் பலரும் அவரை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் எம்.எல்.ஏ-வாகவும் எம்.பி-யாகவும் இருந்த நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக குரல் கொடுக்காமல் ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள் என ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடிப்பது சர்ச்சையாகி உள்ளது. லாட்டரி சீட்டு, கள்ளச்சாராயம் எப்படி மக்களின் உயிரை குடிக்கிறதோ அதேபோல்தான் ஆன்லைன் ரம்மி விளம்பரமும். நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும், ஏற்கனவே வெளியான விளம்பரங்களையும் வெளியிட வேண்டாம் என சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“