சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் பா.ஜ.க-மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் சஞ்சய் ராவுத்மீது பா.ஜ.க கடுங்கோபத்தில் இருக்கிறது. சஞ்சய் ராவுத் மனைவிக்கு மும்பை கோரேகாவ் பத்ரா சாலில் உள்ள பழைய வீடுகளை இடித்துவிட்டு அதனை புதிதாகக் கட்டுவதில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் 1,034 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக சஞ்சய் ராவுத்தின் உறவினர் பிரவின் ராவுத் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சஞ்சய் ராவுத் மனைவி வர்ஷாவுக்குச் சொந்தமான 11.15 கோடி மதிப்புள்ள வீட்டை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மும்பை தாதரில் உள்ள வீடு, மகாராஷ்டிராவின் அலிபாக் கடற்கரை பகுதியில் உள்ள நிலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளாகும். அதோடு கடந்த ஒன்றாம் தேதி சஞ்சய் ராவுத்திடம் 10 மணி நேரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் திருப்தியடையாத அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் சஞ்சய் ராவுத் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை மும்பை பாண்டூப் பகுதியில் உள்ள சஞ்சய் ராவுத் இல்லத்தில் ரெய்டு நடத்தினர். பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் வந்திருந்தனர். சிவசேனா தொண்டர்கள் பெருமளவு கூடி அமலாக்கப் பிரிவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
பல மணி நேரம் நடந்த விசாரணையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் தனக்கு இந்த நில மோசடியில் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ள சஞ்சய் ராவுத், `இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “தவறான நடவடிக்கை. போலியான ஆதாரம். சிவசேனாவை விட்டு விலகமாட்டேன். நான் செத்தாலும் சரணடையமாட்டேன். இந்த ஊழலில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. சிவசேனாவிற்காக தொடர்ந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ.ராம்தாஸ் கதம் கூறுகையில், “தவறு செய்யவில்லையெனில் ஏன் அமலாக்கப் பிரிவை கண்டு பயப்படவேண்டும்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் சஞ்சய் ராவுத்திற்கு அமலாக்கத்துறையில் விசாரணைக்கு ஆஜராக மட்டும் நேரம் இல்லை” என்று தெரிவித்தார்.