சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு பகுதியில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த சகமாணவிகள் கதவைத் தட்டியிருக்கிறார்கள். அப்போதும் மாணவி கதவைத் திறக்காததினால், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அந்த மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த அறையின் கதவை உடைத்து மாணவியின் சடலத்தை மீட்டனர். இது குறித்த திருவேற்காடு பகுதி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி உயிரிழந்த தகவல் அவரின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.
மாணவி இறந்தது தொடர்பாக அவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி செய்தார்கள். இவர்களை அப்புறப்படுத்தி காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கல்லூரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்த மாணவி தற்கொலை கடிதம் எதுவும் எழுதவில்லை என்று சொல்லப்படும் நிலையில், போலீஸார் அவரின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு நடத்திவருகிறார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து பூந்தமல்லி தாசில்தார் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த சுழலில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.