சென்னை: “செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு பிரதமரை அழைத்துவிட்டு அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அது இங்கிருக்கும் இத்தனை கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா? எதிரியாக இருந்தாலும் வரசொல்லிவிட்டால் பண்பாட்டோடு நடத்தி அனுப்பியிருக்க வேண்டும்,அதுதான் முறை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் சட்ட விதிகளை மீறி TANTRANSCO ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கன்டண முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: ” இந்தியா 110 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. தமிழகத்திற்கு 7 லட்சம் கோடி கடன் வந்துள்ளது. இந்த கடன் விழுக்காடு உயர்வுதான் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற, கட்டமைக்க நினைக்கின்ற வளரச்சி. தமிழகத்தில் 10 ஆயிரம் அரசுப் பள்ளிக்கூடம் இடியும் நிலையில், சீரமைக்க முடியாத நிலையில் உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் பணம் வாங்கி சீரமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த அவர்களிடமே ஊதியம் பெற்றுக் கொள்ளும்படி கூறுவீர்களா?
இவ்வளவு சிக்கல் இருக்கும்போது 80 கோடி ரூபாய்க்கு கடலுக்குள் பேனா வைக்கிறேன் என்று கூறுவது சரியா? சமாதி வைத்ததே அதிகம். எனவே தேவை இல்லாத ஆட்டமெல்லாம் காட்டக்கூடாது. மக்கள் காசை வீணடிக்கக்கூடாது, ஆட்சி நடத்துங்கள். செஸ் போட்டி வந்துவிட்டது, அடுத்தது கடலோரத்தில் நடக்கின்ற கையுந்து பந்து போட்டிக்கு முதல்வர் அனுமதி கேட்கிறார். அதன்பின்னர் புலிகளை காப்பதற்கான கருத்தரங்கு நடத்த அனுமதி கேட்கிறார். இதிலேயே வண்டி ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் வருவதாக கூறினாரா? அல்லது தமிழக அரசு சென்று அழைத்ததா? தமிழக அரசுதானே அழைத்தது. முகநூலில் அவரை விமர்சித்து எழுதக்கூடாது என்று தமிழக அரசு கூறுகிறது. ஒன்று பிரதமரை ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கக்கூடாது, அழைத்தால் அவருக்குரிய மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவருடை படங்களை இடம்பெற செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் கூப்பிடாமல் இருந்திருக்க வேண்டும்.
இதே போட்டியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் நடத்தினார். அவர் பிரதமரையெல்லாம் அழைக்கவில்லை. சிறந்த வீரர்கள் எல்லாம் வந்து கலந்துகொண்டு சென்றனர். தமிழக அரசு பிரதமரை அழைத்துவிட்டு அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அது இங்கிருக்கும் இத்தனை கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா?
எதிரியாக இருந்தாலும் வரசொல்லிவிட்டால் பண்பாட்டோடு நடத்தி அனுப்பியிருக்க வேண்டும். அதுதான் முறை. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அவர் கூறினார்.