ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க 'ஆபரேஷன் தாமரை ப்ளான்'- காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

ஜார்க்கண்டில் தங்கள் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ சதித் திட்டத்தை பாஜக மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.
இதனிடையே, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் கோடிக்கணக்கான பணத்துடன் ஒரு கார் சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்று இரவு ஹவுரா நெடுஞ்சாலையில் ஒரு காரை மடக்கி சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், அந்த காரில் இருப்பது ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களான இர்ஃபான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் கொங்காரி ஆகியோரிடம் இந்தப் பணம் யாருடையது, எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
image
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஜார்க்கண்டில் ஜேஎம்எம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக சதித்திட்டம் தீட்டுகிறது. இதற்காக அந்தக் கட்சி செயல்படுத்தி வரும் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம் தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. மகாராஷ்டிராவில் என்ன செய்ததோ அதையே ஜார்க்கண்டிலும் செய்ய பாஜக எத்தனிக்கிறது” எனக் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.