பிரித்தானியாவில் தாயார் இறந்த தகவலை பேஸ்புக் பக்கத்தில் பொதுமக்களில் யாரோ பதிவிட்டதில் இருந்து தெரிந்து கொண்டதாக கூறி அவரது மகன் கடும் வேதனையடைந்துள்ளார்.
நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியை சேர்ந்த 75 வயது கில்லன் என்பவரே தெருவில் சுருண்டு விழுந்து மரணமடைந்தவர்.
இந்த நிலையில் தமது தாயாரிடம் இருந்து வழக்கமான தொலைபேசி அழைப்புகள் எதுவும் இல்லை என தவித்துப் போயுள்ளார் 52 வயதான கெவின் சிம்சன்.
கில்லன் மரணமடைந்து மூன்று நாட்களுக்கு பின்னர் பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதாகவும், அவருடன் காணப்பட்ட நாயை காப்பகத்தில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தமது தாயார் தொடர்பில் அவரது தோழி ஒருவரிடம் விசாரித்துள்ளார் கெவின்.
உறுதியான பதில் கிடைக்காத நிலையில், நேரடியாக தாயார் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்றுள்ளார்.
தாயார் அங்கே இல்லை என்பதை உறுதி செய்த கெவின், சந்தேகத்தின் அடிப்படையில் வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கே கில்லனின் கார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. ஆனால் கில்லன் அப்பகுதியில் காணப்படவில்லை.
இதனையடுத்து குடியிருப்புக்கு திரும்பிய கெவின், அப்பகுதி மக்களுக்கான பேஸ்புக் பக்கத்தில் பார்வையிட, பெண்மணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நொறுங்கிப் போன கெவின், உடனடியாக லிங்கன்ஷயர் காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்கள் கில்லன் மரணமடைந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, நாட்டிங்ஹாம்ஷயர் பொலிசார் தகவலை தெரியப்படுத்துவார்கள் என நம்பியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நடந்த தவறுக்கு மன்னிப்பும் கோரியுள்ளனர்.