மதுரையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்று பகலில் வெயில் இருந்த நிலையில், மாலையில் திடீரென மழை பெய்தது. 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரம் என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.
மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. ஆங்காங்கே வாகனங்கள் பழுதடைந்தன.
மழைக்கு 4 பேர் உயிரிழப்பு
மதுரையில் நேற்று பெய்த திடீர் மழையால், மாநகரமே ஸ்தம்பித்தது. ரயில்வே நிலையம் எதிரே உள்ள மேல பெருமாள் மேஸ்திரி வீதியில், மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் எதிர்ப்புறம் மழைக்காக மரத்தடியில் வயதான தம்பதியினர் ஒதுங்கி இருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். 50 வயது மதிக்கத்தக்கதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில் உயிரிந்தவர்கள் தெற்குவாசல் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் அவருடைய மனைவி என்பது உறுதியானது. அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தார்களா? அல்லது மழைநீரில் தவறி விழுந்து இறந்தார்களா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல் ஆண்டாள்புரம் மேற்கு தெரு பகுதியில் வீட்டில் தச்சு பணியில் ஈடுபட்டு வந்த முருகன் (52), ஜெகசீதன் (38) ஆகியோர் மின்சாரம் தாங்கி உயிரிழந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“