ஆரசியலில் நீண்ட கால நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள். இது ஓ. பன்னீர் செல்வம் (ஓ.பி.எஸ்) விவகாரத்தில் தற்போது பலித்துவருகிறது. அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமையை ஓ.பி.எஸ் தரப்பு கடுமையாக எதிர்த்தது.
அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். எனினும் கடந்த 11ஆம் தேதி சென்னையில் திட்டமிட்டப்படி பொதுக்குழு நடந்தது. ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
அதிமுக தலைமையகம் சூறையாடப்பட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் விலைமதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
தொடர்ந்து முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், அதிமுக கட்சியில் விதிகள் திருத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஒ.பன்னீர் செல்வம் வகித்த கட்சி மற்றும் சட்டப்பேரவை பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம், பாஜகவின் மேலிட ஆதரவை பெற முயன்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டையாக போட்டார். மறுபுறம் அதிமுக கட்சிக்குள் எப்படியாவது சசிகலாவை கொண்டுவர நினைக்கிறார். ஆனால் அதற்கும் எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
மேலும் சசிகலாவும் கள யதார்த்தம் மற்றும் நீதிமன்ற வழக்குகளை எண்ணி எந்தப் பக்கமும் சாயாமல் காணப்படுகிறார். இந்த நிலையில் இன்று (ஜூலை31) அமமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள டிடிவி தினகரன் தேனி மாவட்டம் சென்றார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சையது கான் தலைமையில் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமமுக செயல் வீரர்கள் கூட்டத்துக்கு சென்ற டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரளாக வரவேற்பு அளித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உள்கட்சி பிரச்னை உச்சக் கட்டத்தை எட்டியபோது எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கினார். ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்தப் பதவிச் சண்டையில் ஓபிஎஸ் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திர நாத்தும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக தொடர்பாக வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை.
ஏற்கனவே வழக்கு நடைபெற்ற சென்னை உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும் என ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தியது. முன்னதாக இருவரும் சமாதானமாக செல்ல வாய்ப்புள்ளதா என நீதிமன்றம் கேட்டது. அப்போது எடப்பாடி தரப்பு வாய்ப்பு இல்லை என மறுத்துவிட்டது நினைவு கூரத்தக்கது.