தொடர் மழையால் மகசூல் அதிகரித்துள்ளதால், சூளகிரி சந்தையில் கொத்தமல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல, சூளகிரி தாலுகாவில் உள்ள 42 ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சூளகிரி, புலியரசி, செம்பரசனப்பள்ளி, மாரண்டப்பள்ளி, அத்திமுகம், ஒம்தேபள்ளி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொத்தமல்லி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி, சூளகிரி கொத்தமல்லி சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கிருந்து கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி டன் கணக்கில் கொத்தமல்லி விற்பனைக்கு செல்கிறது. நிகழாண்டில் பெய்த மழையால், கொத்தமல்லி மகசூல் அதிகரித்துள்ளது. இதேபோல ஆந்திராவிலும் மகசூல் அதிகரித்துள்ளதால், சூளகிரி சந்தையில் கொத்தமல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ரூ.5-க்கு விற்பனை
இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.25-க்கு குறையாமல் விற்பனையானது. இந்நிலையில், ஆந்திராவில் கொத்தமல்லி மகசூல் அதிகரித்துள்ளது. மேலும், உள்ளூரிலும் தொடர் மழையால் மகசூல் அதிகரித்துள்ளது.
ஆந்திரா மற்றும் சூளகிரி பகுதிகளில் இருந்தும் வெளியூர் காய்கறி சந்தைகளுக்கு கொத்தமல்லி அதிக அளவில் விற்பனைக்கு செல்கிறது. இதனால், ஒரு கட்டு ரூ.5-க்கு விற்பனையாகிறது. விலை சரிவு காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.