நித்யானந்தாவின் மறு உருவம் என மோசடி| Dinamalar

உத்தர கன்னடா : நான்தான் நித்யானந்தாவின் ‘மறு உருவம்’ என கூறி பலரிடம் மோசடி செய்த போலி சாமியாரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.உத்தர கன்னடாவின் அங்கோலா அருகே உள்ள ஆச்சவேயா போரள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் சன்னதம்மா, 35. ஆட்டோ டிரைவராக இருந்த இவர், சில ஆண்டாக தன் வீட்டில் ஆசிரமம் அமைத்து கொண்டு தன்னை ‘பிடதி நித்யானந்தாவின் மறு உருவம் சத்யானந்தா’ என கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.

மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஜோதிடம், வாஸ்து, மத போதனை செய்தார். ‘சத்யானந்தா பரமசிவா’ என்ற பெயரில் முகநுால் கணக்கு துவங்கி தினமும் ஆன்மிக சொற்பொழிவாற்றி வந்தார்.நான்தான் கடவுள்; பாரத மாதா தான் என் மனைவி; பூமியில் உள்ளவர்கள் அனைவரும் என் குழந்தைகள் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பெண்களிடம் கடவுளை காட்டுகிறேன் என கூறி தகாத முறையில் நடக்க முயன்றார். ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.இதனால் பஜ்ரங்தள் அமைப்பினர், தர்ம அடி கொடுத்து எச்சரிக்கை விடுத்திருந்தனர். கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், இவருக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி, யாரும் ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்.

போலி சாமியாரிடமும், ‘யாரையும் மோசம் செய்ய மாட்டேன்’ என, எழுதி வாங்கி கொண்டனர். ஆனாலும் அவர் மிரட்டி பணம் பறிப்பது, பெண்களை பலாத்காரம் செய்ய முயற்சிப்பது என தொடர்ந்தார்.சில நாட்களுக்கு முன் தட்சிண கன்னடாவின் மங்களூரை சேர்ந்த பெண்ணிடம், ‘கடவுளை காட்டுகிறேன்’ என கூறி பலாத்காரம் செய்ய முயன்றார். தகவல் அறிந்த ஊடகத்தினர், சில நாட்களுக்கு முன் அவரது வீட்டுக்கு சென்றனர். இதை அறிந்த போலி சாமியார் தலைமறைவானார். இவரால் கிராமத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி, கிராமத்தினரும் தேடினர்.அங்கோலாவில் வீடு ஒன்றில் இருந்த போது கிராமத்தினர் நேற்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.தன்னை பிடித்து கொடுத்த கிராமத்தினர் மீதே, போலி சாமியார் பதில் புகார் கொடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.