இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்தார். அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர், அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து வந்த அவர், அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். மேலும், தனது சீடர்களுக்கு சத்சங்கங்களையும் வழங்கி வந்தார்.
இதனிடையே, அண்மைக்காலமாக அவர் பற்றிய தகவல் வெளி வராமல் இருந்தது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், தான் உயிரிழக்கவில்லை என்று தனது முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்த நித்யானந்தா, தமது புகைப்படத்தையும் அதில் பகிர்ந்தார். மேலும், தானே கைப்பட எழுதிய கடிதத்தையும் அதில் அவர் இணைத்திருந்தார்.
இதையடுத்து, அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் நித்யானந்தா பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், நித்யானந்தாவின் சொரூபம் என்று தன்னை கூறிக் கொண்டு சுற்றித்திரிந்த ஒருவருக்கு அடி, உதை விழுந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா அச்சிவே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொரள்ளி என்ற கிராமத்தில் நித்யானந்தா போல உடை அணிந்தும், அவரை போல தலை முடி வளர்த்து கொண்டும் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அவர் தன்னை நித்யானந்தாவின் சொரூபம் எனவும், தனது பெயர் சத்யானந்தா என்றும் கூறிக் கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பஜ்ரங்தள் அமைப்பினர், அவரை அடித்து உதைத்து இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். நித்யானந்தாவின் சொரூபம் என்று கூறியவரின் உண்மையான பெயர், சேகர் படகர் என்பதும், அவர் ஓட்டோ ஓட்டுநர் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி காவல்துறையில் இதுவரை புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.