மேற்கு வங்க மாநிலத்தில் காரில் பணத்துடன் சிக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஸ், கொங்காரி ஆகிய எம்எல்ஏக்கள், நேற்று மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவுக்கு காரில் வந்தனர். அவர்கள் ஏராளமான பணத்துடன் வருவதாக மேற்கு வங்க மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், ஹவுரா அருகே அவர்களது காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். காரில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து, மூன்று எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது.
இந்நிலையில், காரில் பணத்துடன் சிக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்தத் தகவலை, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே உறுதிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, மேலும் அவர் கூறுகையில், “எல்லோரைப் பற்றிய தகவல்களும் எங்களிடம் உள்ளன. வரும் நாட்களில், அது எந்த மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராகவோ இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும், இதில் தொடர்புடையவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறினார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாகவும், இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.