சென்னை: உயர்கல்வி நிறுவனங்கள்போல, பள்ளிகளுக்கும் தரக் கட்டுப்பாடு, அங்கீகார முறை அவசியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தேசிய கல்வி மற்றும் பயிற்சிக்கான அங்கீகார வாரியம் (என்ஏபிஇடி), இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பு ஆகியவை சார்பில், பள்ளிகளுக்கு தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருவதால் புதுச்சேரியில் 75 பள்ளிகளை பார்வையிட திட்டமிட்டு, இதுவரை 26 பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளேன். இந்த ஆய்வின்போது, உயர்கல்வி நிறுவனங்கள்போல பள்ளிக்கும் தரக்கட்டுப்பாடு அவசியம் என்பதை உணர்ந்துகொண்டேன். ஏனெனில், உயர்கல்வியின் அடித்தளமே பள்ளிக்கல்விதான். அதை மிகவும் தரமானதாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முழுமையான கல்வி கிடைக்காது. மேலும், பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையும் மாணவர்களின் கற்றலை பாதிக்கிறது.
இதையெல்லாம் மனதில் வைத்துதான் உலகத் தரத்திலான தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மிகுந்த தரம் வாய்ந்தவர்களாக இருப்பதை இது உறுதிசெய்கிறது.
அதனுடன் சிறந்த கல்வியை தருவதற்கு, பள்ளிகளுக்கு தரம்குறித்த அங்கீகார முறை தேவையாக உள்ளது. இதன்மூலம் அனைத்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.
சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமனவருத்தம் தருகிறது. சவால்களை எதிர்கொள்ளும் மனஉறுதியை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து வெளிவர போதிய மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவரான விஐடிவேந்தர் ஜி.விசுவநாதன் பேசும்போது, ‘‘நம்நாட்டில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றின் தரத்தை உறுதிசெய்ய தரநிர்ணய அங்கீகார முறைஅவசியம். அதேபோல, கல்விக்கான நிதி ஒதுக்கீடும் 6 சதவீதம் அளவுக்கு உயர்வதுடன், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசுகள் நிதியுதவி வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் உலக அளவில் நாம் எதிர்நோக்கும் வளர்ச்சியை பெறமுடியும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் என்ஏபிஇடி தலைவர் பி.ஆர்.மேத்தா, தலைமைசெயல் அதிகாரி மனிஷ் ஜிண்டால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.