2021 ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முருகேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருதாக பால சாகித்ய புரஸ்கார் விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழகத்தைச் சேர்ந்த முருகேஷூக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அவர் எழுதிய `அம்மாவுக்கு மகள் சொன்ன முதல் கதை’ என்ற புத்தகத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர் பொறியியல் பட்டதாரியும் தமிழில் இளம் முனைவர் பட்டமும் பெற்றவராவார். தற்போது திருவண்ணாமலையில் உள்ள வந்தவாசியில் வசித்து வரும் இவர், கவிஞர் – எழுத்தாளர் – சிற்றிதழ் ஆசிரியர் – கல்வி ஆலோசகர் – பதிப்பாசிரியர் என பல தளங்களில் இயங்கி வருகிறார்.
குழந்தைகளுக்காக மட்டும் இதுவரை பதினெட்டு புத்தகங்களை எழுதியுள்ள இவர், ஏராளமான கவிதை புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டு இவர் எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதைத்தொகுப்பு தமிழகம் முழுவதும் 32 ஆயிரம் அரசு பள்ளிகளில் அச்சிட்டு வழங்கப்பட்டது. தமிழக அரசின் பல விருதுகளும் பல தனியார் அமைப்புகளின் விருதுகளும் இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM