பிரிட்டன் பிரதமர் தேர்தல் ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து பிரதமர் தேர்தல் வழக்கத்தை விட இந்தியாவில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதற்குக் காரணம் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதே. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் போரிஸ் ஜான்சன் தலைமை மீது அதிருப்தி எழுந்தநிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக தனது பதவியை ராஜினாமா செய்து அவரது அரசுக்கு முடிவுரையைத் தொடங்கி வைத்தவர் ரிஷி சுனக். கடந்த 5-ம் தேதி ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்ய, அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சஜித் ஜாவித் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இந்த நெருக்கடியைத் தொடர்ந்து தான் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதி வேட்பாளர்களாக ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸ்ஸும் உள்ளனர். இதில் ரிஷி சுனக் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். லிஸ் ட்ரஸ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். இதுவரை நடந்த ஒவ்வொரு வாக்குப்பதிவிலும் ரிஷி சுனக்கே முன்னிலை வகித்தார். கடந்த 20-ம் தேதி நடைபெற்ற இறுதி மற்றும் 5-வது சுற்று வாக்குப்பதிவில், ரிஷி சுனக்கிற்கு 137 வாக்குகளும், லிஸ் ட்ரஸ்ஸுக்கு 137 வாக்குகளும் கிடைத்தன.
அடுத்த பொதுத் தேர்தலில் லெபர் கட்சியை தோற்கடிக்க தன்னால் தான் முடியும் எனவும், தான் அறிமுகப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள் தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா என்னும் நம்பமுடியாத கடினமான காலகட்டத்தில் நாட்டை காக்க உதவியதாகக் கூறியுள்ளார் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் கோலோச்ச முடியா? ரிஷி சுனக்கிற்கு பலமாகவும், பலவீனமாகவும் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
யார் இந்த ரிஷி சுனக்?
ரிஷி சுனக்கின் தாத்தா – பாட்டி பஞ்சாபை சேர்ந்தவர்கள். இவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் 1960களிலேயே பிரிட்டனுக்கு குடி பெயர்ந்தனர். ரிஷி சுனக்கின் தந்தை கென்யாவில் இருந்தும், தாய் தான்சானியாவில் இருந்தும் பிரிட்டனுக்கு குடி பெயர்ந்தனர். ரிஷி சுனக்கின் தந்தை மருத்துவர் ஆவார். அவரது தாய் மருத்தகம் ஒன்றை நடத்தி வந்தார். தாயும் தந்தையும் மருத்துவத்துறையில் இருந்தாலும் ரிஷி சுனக்கிற்கு நிதித்துறையிலே ஆர்வம் இருந்தது.
ஆக்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்ற ரிஷி சுனக், கலிஃபோர்னியாவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார். Investment banker-ஆக தனது கோல்ட்மேன் சேக்ஸில் பணியாற்றிய அவர், 2009-ம் ஆண்டு இன்ஃபோஸிஸ் நிறுவன உரிமையாளர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ரிஷி சுனக்கின் அரசியல் வாழ்க்கை 2015-ம் ஆண்டு தொடங்கியது. Yorkshire-ல் உள்ள Richmond தொகுதியில் இருந்து 2015-ம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெரசா மே பிரிட்டன் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார் ரிஷி சுனக். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய ”பிரெக்சிட்” தீர்மானத்திற்கு ஆதரவாக ரிஷி சுனக் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் அரசு பதவியேற்றபோது, ரிஷி சுனக்கிற்கு கருவூல தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் 2020-ம் ஆண்டு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, நிதியமைச்சராக பதவி உயர்வு பெற்றார் ரிஷி சுனக். பிரிட்டன் அமைச்சரவையில், நிதியமைச்சர் பதவி என்பது பிரதமர், துணைப்பிரதமருக்குப் பிறகு, 3-வது பெரிய பொறுப்பு ஆகும்.
கொரோனா காரணமாக உலகப் பொருளாதாரமே முடங்கிய நிலையில், அதனை மீட்டெடுக்கும் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டார் ரிஷி சுனக். கொரோனா காலத்தில் 350 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான நிவாரண நிதித்திட்டத்தை அறிவித்தது மக்களிடையே ரிஷி சுனக்கின் செல்வாக்கை அதிகரித்தது.
ரிஷி சுனக் மீதான சர்ச்சைகள்:
அதே சமயம், ரிஷி சுனக் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்த சமயத்தில் பிரிட்டன் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கத்தை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அத்தியாவசியப் பொருட்களின் விலை 9 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்தன. கடந்த மாதம், 40 ஆயிரம் பிரிட்டன் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வேலைநிறுத்தமாகும்.
இதே போல, ரிஷி சுனக்கின் மனைவியும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி Non – Domicile அந்தஸ்து பெற்று வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்தவில்லை என எழுந்த குற்றச்சாட்டும் ரிஷி சுனக் மீதான விமர்சனத்தை அதிகரித்தது. Non – Domicile அந்தஸ்து பெற்றவர்கள் இங்கிலாந்தில் உள்ள வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அவருக்கு உள்ள பங்குகளில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கான, 20 மில்லியன் பவுண்ட்ஸ் வரியை செலுத்தாமல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது சட்டப்பூர்வமாகக் குற்றம் அல்ல என்றாலும், தொழிலாளர்களுக்கு வரியை உயர்த்திவிட்டு நிதியமைச்சரின் மனைவி வரிச்சலுகை பெறுவதா என தொழிலாளர் கட்சி விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து, தனது வெளிநாட்டு வருமானத்திற்கும் அக்ஷதா மூர்த்தி வரி செலுத்தத் தொடங்கியதாக அறிவித்தார் ரிஷி சுனக். கொரோனா விதிகளை மீறி பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டதாக போரிஸ் ஜான்சன் மீது விமர்சனம் எழுந்தபோது, அதில் கலந்துகொண்ட ரிஷி சுனக்கும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், தற்போது இறுதியில் இருவர் மட்டுமே உள்ளனர். இதுவரை நடைபெற்ற அனைத்து வாக்கெடுப்புகளிலும் ரிஷி சுனக்கே முன்னிலை வகித்தார். இவர்களில் யார் பிரிட்டன் பிரதமராகப் போகிறார் என்பது அடுத்த மாதம் 5-ம் தேதி தெரிந்து விடும். கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள், செப்டம்பர் 2-ம் தேதிக்குள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ வாக்களிப்பார்கள். இவர்களுக்கான வாக்குச்சீட்டு ஆகஸ்ட் 1 -ம் தேதிக்குள் வழங்கப்படும்.
எம்.பிக்கள் வாக்கெடுப்பில் முன்னிலை வகித்தாலும், கருத்துக்கணிப்புகளில் லிஸ் ட்ரஸ் முன்னிலை வகித்துள்ளார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், பிரிட்டன் பிரதமர் யார் என்பதற்கான விடை தெரிய நாம் செப்டம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ