தர்பங்கா: பீகார் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் தேர்வில் 100-க்கு 151 மதிப்பெண்கள் ஒரு மாணவன் பெற்றதாகவும், பூஜ்யம் எடுத்த மற்றொரு மாணவர் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டதாகவும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக் கழகத்தின் (எல்என்எம்யு) பி.ஏ (ஹானர்ஸ்) இளங்கலை மாணவர் ஒருவர், பல்கலைக் கழகத்தின் பகுதி-2 தேர்வில் அரசியல் அறிவியல் தாள் – 4ல் 100க்கு 151 மதிப்பெண்கள் பெற்றதாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் கூறுகையில்: முடிவுகளைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். இது தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்றாலும், முடிவை வெளியிடுவதற்கு முன்பு அதிகாரிகள் அதைச் சரிபார்த்திருக்க வேண்டும், என்று கூறினார். இதேபோல், பி.காம் பகுதி-2 தேர்வில் கணக்கு மற்றும் நிதி தாள்-4ல் பூஜ்ஜியம் பெற்ற மற்றொரு மாணவர், அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது தட்டச்சு பிழை என்று பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. அவர்கள் எனக்கு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை வழங்கினர்’ என்றார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில், ‘இரண்டு மதிப்பெண் தாள்களிலும் தட்டச்சுப் பிழைகள் இருந்தன. பிழைகளை சரிசெய்த பிறகு, இரண்டு மாணவர்களுக்கும் புதிய மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன’ என்றார் .