புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவை மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்.
அந்த வீடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, சிறப்பான நடன வடிவமைப்பு. புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தயாரித்துள்ளதாக அறிகிறேன். சதுரங்க காய்கள் உயிர் பெற்றுள்ளன. இந்தியா தான் சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்தது என்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
Superb. Choreographed, I’m told, by Ms Kavitha Ramu, Collector Pudukkottai. Makes the chess pieces come alive in our imagination. Also it has authenticity, given the game was invented in India. Bravo! pic.twitter.com/BZCQvluyFz
— anand mahindra (@anandmahindra) July 29, 2022
முதல்வர் பகிர்ந்த வீடியோ:
இரு அரசர்களிடையேயான போர்க்களக் காட்சியை உருவகப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு ‘சதுரங்க நடன சித்தரிப்பு’ எனப் பெயரிடப்பட்டது.
செஸ் பலகையில் செவ்வியல் மற்றும் கிராமிய நடன அம்சங்களுடன் மல்யுத்தக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இறுதியில் மீசை முறுக்கிய மன்னரை, தனது வாள் வீச்சுத் திறனால் ‘செக்’ வைத்து நிறுத்துகிறார் எதிரணியின் ராணி. உரையாடல் எதுவுமின்றி பின்னணி இசையுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3.38 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் பகிரப்பட்டது.
இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் தற்போது தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இந்த வீடியோவைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.