புதுக்கோட்டை: புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் அனிதா கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் இன்று (ஜூலை31) நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சப்பரங்களில் வைத்திருந்த சுவாமி சிலைகளும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த விபத்து நடந்த இடத்தில், இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் அனிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் துணை ஆணையர் அனிதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்த கோயிலின் தேர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஓடவில்லை. தற்போது தேர் சரிசெய்யப்பட்டு இன்று தேரோட்டம் நடந்தது. அதிகப்படியான கூட்டத்தின் காரணமாக பிடிமானம் இல்லாததால், தேர் சரிந்துவிட்டது.
தொழில்நுட்ப ரீதியாக என்ன கோளாறு என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பொதுப்பணித்துறையிடம் முறையாக சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் வாங்காமல், அனுமதிக்க மாட்டோம். இது எதிர்பாராமல் நடந்தது.
தேர் சரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.