புதுக்கோட்டை: “தேர் விபத்து சம்பவம் மனதிற்கு மிகவும், வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அறநிலையத்துறை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை அனைவரும் முழுமையாக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் எல்லாம் பேசப்பட்டுள்ளது. எனவே வரும் காலத்தில் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம்” என்று அவர் கூறினார்.
புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயிலில் இன்று (ஜூலை31) நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து சப்பரங்களில் வைத்திருந்த சுவாமி சிலைகளும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த விபத்து குறித்து ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ வை.முத்துராஜா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது:
“கரோனா காலத்திற்குப் பின்னர், இந்த தேர் ஓட்டத்தை தொடங்கியிருக்கிற போது, பக்தர்கள் ஆர்வமிகுதியில் இழுத்ததின் காரணமாக இந்த தேர் சாய்ந்துள்ளது. தீட்சிதர் உள்ளிட்ட 6,7 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த சம்பவம் மனதிற்கு மிகவும், வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அறநிலையத்துறை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை அனைவரும் முழுமையாக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் எல்லாம் பேசப்பட்டுள்ளது. எனவே வரும் காலத்தில் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம்.
இனிவரும் காலத்தில், இதுபோன்ற எந்த சிறு விபத்தும் இல்லாதவாறு முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.