மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் மதுபான உணவகம் நடத்தி வருவதாகவும், அதன் உரிமையைப் புதுப்பிக்க இறந்த நபரின் ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாவும் வழக்கறிஞர் ஒருவர் புகாரளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த சொத்துகளுடன் ஸ்மிருதி இரானியின் மகளுக்கு தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஸ்மிருதி இரானி, “என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவள் மதுக்கடையொன்றும் நடத்துவதில்லை. தரவுகளை சரிபாருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், போர்ச்சுகீசிய கால சட்டம் இந்த விவகாரத்தில் தொடர்பில் இருப்பதாக, உணவகத்துக்கான உரிமம் வழங்கப்பட்ட அந்தோணி டிகாமா என்பவரின் குடும்பத்தினர் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த வெள்ளியன்று, மாநில கலால் ஆணையர் நாராயண் காட் விசாரணை நடத்தினார். அதில் அந்தோணி டிகாமாவின் குடும்பத்தினர், “இது முழுக்க முழுக்க எங்களின் வணிகம், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து அந்தோணி டிகாமா குடும்பத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பென்னி நாசரேத், “போர்ச்சுகீசிய சட்டத்தின்படி, கணவன் மனைவி இருவரில் யாரேனும் இறந்தால், அவரின் சொத்துகள் உயிரோடிருக்கும் இணையருக்கே செல்லும். இந்த போர்ச்சுகீசிய சிவில் சட்டம் கோவாவில் இன்னும் அமலில் இருக்கிறது. இதன்படி சொத்தின் உரிமையானது கணவன் இறந்தவுடன் தானாகவே மனைவியின் பெயருக்கு மாற்றப்படும். எனவே இதில் உண்மையில் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.