தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மதநல்லிணக்கம் பேணுவதற்காக மதநல்லிணக்க சந்திப்பு கூட்டம் நடத்தியுள்ளார். டெல்லியில் நேற்று சூபி மதகுருக்களுடன் சர்வமத நல்லிணக்க சந்திப்பை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நடத்தினார்.
நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான பிரதமர் மோடியின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் அஜித் தோவல் பேசுகையில் கூறியதாவது: சில தீவிரவாத அமைப்புகள் மதத்தின் பெயரால் கலவரத்தையும், மோதலையும் உருவாக்கி வருகிறது, இது நாட்டை பாதிக்கிறது. உலகில் மோதல் சூழ்நிலை நிலவுகிறது, அந்த சூழ்நிலையை நாம் சமாளிக்க வேண்டுமானால் நாட்டின் ஒற்றுமையை ஒன்றாக பேணுவது முக்கியம்.
இந்தியா முன்னேறும் விதம் அனைத்து மதத்தினரும் பயன்பெறுவர். சில கூறுகள் இந்தியாவின் முன்னேற்றத் கெடுக்கும் சூழலை உருவாக்க முயற்சிக்கிறது. அந்த தீய சக்திகள் மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரில் வன்முறை மற்றும் மோதலை உருவாக்குகிறார்கள். இது முழு நாட்டையும் பாதிக்கிறது. அதே நேரத்தில் நாட்டிற்கு வெளியேயும் பரவுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பிரிவினரும் நாம் ஒன்றாக ஒரு நாடு என்று உணர வேண்டும். அதில் நாம் பெருமைப்படுகிறோம்” என்று அவர் பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு வெளிநாடுகளில் இருந்தும் கடும் கண்டனம் வந்து இருந்தது. அப்போதே மத்திய அரசு இது போன்ற கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ளாது என்று கூறி இருந்தது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் டெய்லர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்குப் பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான், அஜித் தோவல் இந்த கருத்தைக் கூறி உள்ளார்.