தாம்பத்திய உறவு தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு, நிபுணர்களின் உதவியோடு தீர்வு சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘காமத்துக்கு மரியாதை’ என்ற இந்த டிஜிட்டல் தொடர். வாசகர்கள் தங்கள் பிரச்னைகளையும் சந்தேகங்களையும், [email protected] என்ற மெயில் ஐ.டி மூலமாக எங்களுக்குத் தெரிவித்து வந்தார்கள்.
தொடர் முடிவடைந்த பிறகும் வாசகர்களின் சந்தேக மெயில்கள் தொடர்ந்து கொண்டிருக்கவே, காமத்துக்கு மரியாதை சீசன் 2 ஆரம்பித்தோம். இந்த சீசன் முழுக்க, வாசகர்களின் பிரச்னைகளுக்கு பாலியல் மருத்துவர் காமராஜ் தீர்வு வழங்கி வந்தார். இதோ, சீசன் 3 ஆரம்பித்திருக்கிறோம். இதில் நம்முடன் கைகோத்திருப்பவர், மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
‘மனைவியின் மாதவிடாய் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா; அப்படி வைத்துக்கொண்டால் ஜன்னி வந்துவிடும் என்று சொல்கிறார்களே… அது உண்மையா; மாதவிடாய் ரத்தம் கணவரின் உறுப்பில் பட்டால் தொற்று ஏற்படுமா’ – இந்தக் கேள்விகளில் ஒன்றை மட்டுமாவது யோசிக்காத ஆண்களே இல்லை எனலாம். அதிலும் ஜன்னி குறித்த பயம் இன்றைக்கும் சிலரிடம் இருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கான தீர்வுகளைத்தான், இந்த வாரம் டாக்டர் நாராயண ரெட்டி பேசவிருக்கிறார்.
”இந்தச் சந்தேகங்களை நானும் கிட்டத்தட்ட 56 வருடங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ‘மாதவிடாயின்போது தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா, கூடாதா’ என்று கேட்டால், சம்பந்தப்பட்ட கணவன், மனைவிக்கு சம்மதம் என்றால் தாராளமாக ஈடுபடலாம். அப்படி ஈடுபடுவதற்கு முன்பு, எப்போதும்போல இருவரும் தங்கள் பிறப்புறுப்புகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் வெளியேறக்கூடிய ரத்தமானது, பெண்ணின் ஜனன உறுப்பில் இருக்கும் வரை, காய்ச்சி வடிகட்டிய ‘டிஸ்டில்டு வாட்டர்’ போல சுத்தமாக இருக்கும். அதனால், அந்த நேரத்தில் உறவு கொண்டால் கணவருக்குக் கிருமித்தொற்று வரும் என்று பயப்படத் தேவையில்லை. மாதவிடாய் ரத்தம் உடம்பில் இருந்து வெளியேறி, வெளிப்புற கிருமிகளால் தாக்கப்படும்போதுதான் கெட்ட வாடையே வரும்.
மாதவிடாய் நேரத்தில் பல பெண்களுக்கும் அசதி, வயிற்று வலி, அடி வயிற்று தசை இழுத்துப்பிடித்துக் கொள்ளுதல் என்று ஏதோவொரு சங்கடம் உடலில் இருக்கும். இப்படிப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் உறவு கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம்.
உறவு கொள்ளும்போது கிடைக்கிற ஆர்கசம், கருப்பையில் இருக்கிற மாதவிடாய் ரத்தம் வெளியேறுவதால் கிடைக்கிற நிம்மதி போன்ற காரணங்களுக்காக, ஒரு சில பெண்கள் இந்த நேரத்து தாம்பத்திய உறவை விரும்பலாம்.
ஜன்னி என்பது டெட்டனஸ் என்கிற ஒரு நோயின் பெயர். இந்நோய் Clostridium tetani என்ற பாக்டீரியாவால் வரக்கூடியது. தூசு, இரும்பின் துரு, விலங்குகள் இவற்றின் மூலம் இந்த பாக்டீரியா மனிதனுக்குப் பரவும். ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவாது. டெட்டனஸுக்கும் மாதவிடாய்க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியானவுடனே ஆணுறுப்பின் உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை அதிகமாக இருக்கும். அதனால், மாதவிடாய் ரத்தத்தை உள்ளிழுத்துக் கொள்ளலாம். இப்படி நிகழாமல் இருக்க ஆணுறை போட்டுக் கொண்டு உறவு கொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.