“மின்சாரத்துறை அமைச்சரின் கருத்தை நியாயப்படுத்த முடியாது!" – மின் கட்டண உயர்வு குறித்து திருமாவளவன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசு ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளைப் பேசியதற்காக 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக நான்கு பேர் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பா.ஜ.க அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம்

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ க அல்லாத மாநிலங்களை ஆட்சி செய்யும் கட்சிகளின் தலைவர்களை மத்திய அரசு புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் மூலம் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக கணியாமூர் சம்பவத்தில் மாணவி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவுகள் தெரிவிக்கும் வகையில் உள்ளன. ஆனால் அந்தச் சம்பவங்கள் மறைக்கப்பட்டு மடைமாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கூடத்தைத் தாக்கியவர்கள், கலவரத்தை உண்டாக்கியவர்கள் எனத் திசை திருப்பும் செயல் நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி

இது இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உளவுத்துறை தலித் இளைஞர்களால் வன்முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியிருப்பது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாணவியின் சாவுக்கு நீதி வேண்டும். அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உளவுத்துறை மற்றும் காவல்துறை விழிப்பாகச் செயல்பட்டிருந்தால் கலவர சம்பங்கள் நடந்திருக்காது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

திருமாவளவன்

மேலும், தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழக அரசும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் கருத்துச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தை நியாயப்படுத்த முடியாது. சாதாரண ஏழை எளிய மக்களைப் பாதிக்காத வகையில் மின் கட்டணம் இருக்க வேண்டும். மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.