சென்னை: மின் கட்டணம் செலுத்துவதற்காக, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மொபைல் போன் செயலியிலேயே, மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதியை கூடுதலாக ஏற்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
பொது மக்கள் மின் தடை, மின் திருட்டு உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான, அனைத்து வகை புகார்களையும், மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும், மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில், 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். அந்த எண்ணில் ஒரே சமயத்தில், 60 நபர்களிடம் இருந்து புகார் பெறப்படுகிறது. இதனால், அந்த சமயத்தில் மற்றவர்கள் தொடர்பு கொள்ளும்போது காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மின் தடை உள்ளிட்ட அனைத்து புகார்களையும் தெரிவிக்க, கூடுதல் வசதியாக, மொபைல் செயலியை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த செயலியை புதிதாக உருவாக்குவதற்கு பதில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள, மின் கட்டணம் செலுத்தக்கூடிய, ‘tangedco app’ என்ற மொபைல் செயலியிலேயே கூடுதலாக புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரிய மொபைல் செயலியை, ‘கூகுள் பிளே’யில் பதிவிறக்கம் செய்து, மின் இணைப்பு எண்ணை பதிவிட்ட பின் தான், கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படும். மின் தடை தொடர்பாக பொதுவாக புகார் அளிக்கின்றனர். மின் இணைப்பு எண், முகவரியை தருவதில்லை.மொபைல் செயலியில் தெரிவிக்கப்படும் புகார்கள், மின்னகம் நுகர்வோர் மையத்தில் பெறும் வகையில் ஒருங்கிணைப்பு செய்யப்பட உள்ளது. மின் தடை தொடர்பான புகார்களை, மொபைல் செயலியில் தெரிவிக்கும் போது, மின் இணைப்பு எண்ணின் முகவரியை, கணினி வாயிலாக உடனே அறிய முடியும்.விரைவில், மொபைல் செயலியில் புகார் அளிக்கும் வசதி நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement