புதுடெல்லி: ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முடக்கம் முடிவிற்கு வருமா? என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்காக எதிர்க்கட்சிகளுடன் பாஜக தலைவர்களின் நட்பு ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
கடந்த ஜுலை முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறுகிறது. இதன் முதல் நாளிலிருந்து எதிர்க்கட்சிகள் அமளியால் தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துவக்கத்தில் மக்களவையின் நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் முழுவதிலும் இடைநீக்கம் செய்யப்பட்டன. பிறகு இந்த பட்டியலில் மாநிலங்களவையிலும் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங் இணைந்தார்.
இதனிடையே, மாநிலங்களவையில் அடுத்தடுத்த நாட்களில் 22 உறுப்பினர்கள் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில், திமுகவின் ஆறு உறுப்பினர்களுடன் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த 22 உறுப்பினர்களின் இடைநீக்கம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவிற்கு வந்தது. எனினும், துவக்கத்தில் இடைநீக்கமான மக்களவையின் 4 மற்றும் மாநிலங்களையின் ஒரு உறுப்பினர் இடைநீக்கம் ஆகஸ்ட் 12 வரை தொடர்கிறது.
இதுபோன்ற நிலையால், மத்திய அரசு திட்டமிட்டபடி பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலின்படி நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகளில் விவாதிக்கத் தயாராவதாகத் தெரிகிறது.
மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதிலும் எதிர்க்கட்சிகளால் முடங்கி வரும் நிலையை முடிவிற்குக் கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது. இதற்காக பாஜக சார்பில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் நட்பு ரீதியானப் பேச்சுவார்த்தை தொடர்கிறது.
இதில் பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டாவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் மத்திய அமைச்சரான பிரஹலாத் ஜோஷியும் முக்கியப் பங்காற்றுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் விவாதங்களை இருஅவைகளிலும் நடத்த மத்திய அரசு தயாராகி விட்டதாகவும் தெரிகிறது.
எனினும், தொடர் முழுவதிலும் இடைநீக்கமான ஐந்து உறுப்பினர்கள் உத்தரவை ரத்து செய்வதில் பிரச்சனை நீடிப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு இருதரப்பினால் முன்னிறுத்தப்படும் சில நிபந்தனைகள் பிரச்சனையாகி உள்ளது.