'முதலீடுகளையும், வேலைவாய்ப்பையும் கெடுக்க வேண்டாம்'-இபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை

தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலை வாய்ப்புகளையும் பொய்ப் பிரச்சாரம் மூலம் கெடுத்திடும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஈடுபட வேண்டாம் என தமிழக தொழில்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்’ சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு ஏதோ மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் அறிக்கை விடுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
image
வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காக மாசுக் கட்டுப்பாடு வாரியம், இயக்குவதற்கான இசைவினை வழங்க மறுத்துள்ளது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற அடிப்படை விவரம் கூட – அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை. என்றாலும், பாக்ஸ்கான் நிறுவனத்துடனான தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு தொடர்பான உறவு 2006-ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை சிறப்பாக தொடர்ந்து வருகிறது.
பாக்ஸ்கான் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவி உள்ளதே அதற்குச் சாட்சியமாக திகழ்கிறது. இத்திட்டங்களால் பெருமளவில் முதலீடுகளும், பல்லாயிரக் கணக்கானோருக்கு, குறிப்பாக பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் இந்தியப் பயணம் மேற்கொண்டபோதும், அவருடன் தமிழ்நாடு அரசின் சார்பில், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் புதுடெல்லியில் சந்தித்துப் பேசினார்.
image
இந்தச் சந்திப்பின்போது, பாக்ஸ்கான் நிறுவனம், மின்வாகனம் மற்றும் செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ள உள்ளதைச் சுட்டிக்காட்டி, அத்திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவிடுவதற்கு அழைப்பு விடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் என்கிற முறையில், நானும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதினேன். இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘மின்வாகன உற்பத்தி மற்றும் செமி கண்டக்டர் புனரமைப்பு உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவிடப் பரிசீலிப்பதாக’ பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகவே, பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் அதே செமி கண்டக்டர் திட்டங்களை தனியாகச் செயல்படுத்திட பரிசீலித்து வருகிறது என்பதும்- அதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதுமே உண்மை. இது மட்டுமல்ல கடந்த ஒரு வருடத்தில் செமி கண்டெக்டர் மற்றும் மின்வாகனத் துறைகளில் பல முதலீடுகளை மாநில அரசு ஈர்த்துள்ளது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை பட்டியலிட முடியும். சமீபத்தில்,  IGSSV நிறுவனம், புராஜக்ட் சூரியா (Project Suria) என்ற ஒரு செமி கண்டக்டர் புனரமைப்பு (Semiconductor Fab) உயர் தொழில்நுட்பப் பூங்காவை 300 ஏக்கர் பரப்பளவில் அமைத்திட,  தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
image
இத்திட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடு 25,600 கோடி ரூபாய் மற்றும் 1500 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமின்றி, இப்பூங்காவில் அமைக்கப்படும் பல்வேறு திட்டங்கள் மூலமாக 25,000 நபர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்திடவும் வாய்ப்புள்ளது. மேலும் இவ்வாறான பல செமி கண்டக்டர் மற்றும் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வருகிறது. கூடிய விரைவில் இத்துறைகளில் பெரும் முதலீடுகள் தமிழ்நாட்டில் நிச்சயம் ஏற்படவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது மட்டுமல்ல, மின் வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒருவருட காலத்தில், 11,580 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 28,612 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 22 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லூகாஸ் TVS, TI குழுமம், SRIVARU மோட்டார்ஸ், BFW, சிர்மா SGS போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவிட முன்வந்துள்ளன.
image
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஹூண்டாய், செயின்ட் கோபைன், ரெனால்ட் நிஸ்ஸான், டைம்லர், சாம்சங், குரோத் லிங்க், சான்மினா போன்ற பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவின. இத்திட்டங்கள், பெரும் விரிவாக்கங்களை மேற்கொண்டு, அத்திட்டங்களுக்கான துவக்க விழாக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்குடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தனது ‘உள்கட்சி அரசியல் குழப்பத்தில்’ மறந்து விட்டு- தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக இப்படியொரு அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது போடப்பட்ட பெரும்பாலான முதலீடுகள் தொழில் முதலீடுகளே அல்ல. கட்டடம் கட்டுவதற்கான அனுமதி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனம் தொடர்பான திட்டங்களும்தான் மேற்கொள்ளப்பட்டன. தொழில் திட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால், அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 1.50 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இவற்றிலும் பல திட்டங்கள் பெயரளவில் ‘விளம்பரத்திற்காக’ போடப்பட்டவையாகவே உள்ளன. செயல்பாட்டிற்கு வந்த திட்டங்கள் மிக மிகக் குறைவு.
ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டு காலத்திலேயே, 2,02,220 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 192 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020-21ஆம் ஆண்டை போல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அத்திட்டங்கள், செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலுக்கேற்ப, தொழில்துறை மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து சேவைகளையும், முதலீட்டாளர்களுக்குக் கழக அரசு அளித்து வருகிறது. இதன் பொருட்டு, பல திட்டங்கள் தற்போது துவக்கி வைக்கப்பட்டும், அடிக்கல் நாட்டப்பட்டும் வருகின்றன.
முன்பு போல இல்லாமல், மாநிலம் முழுவதும் பரவலாகவும் சீராகவும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும் பின்தங்கிய மாவட்டங்களிலும் பெருமளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக, தூத்துக்குடியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1,150 ஏக்கரில் அமையவுள்ள பன்னாட்டு அறைக்கலன் பூங்கா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் முதற்கட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நேரில் வந்து அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
image
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறது. உலக நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் இன்றைக்கு தமிழகத்தின்பால் திரும்பி உள்ளது. பெரும் முதலீடுகளை ஈர்த்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயித்துள்ள லட்சிய இலக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்திட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது மட்டுமின்றி- அதற்கான திசையில் வேகமாக பயணித்து வருகிறது.
தொழில் தொடங்க வருவோரிடம் அ.தி.மு.க. ஆட்சியில்- அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போதிருந்த ‘கலாச்சாரத்தை’ மனதில் வைத்துக் கொண்டு எங்கள் முதலமைச்சரின் நேர்மையான ஆட்சி மீது கல்லெறிய வேண்டாம். தொழில் வளர்ச்சிக்காக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் இந்த அரசின் நோக்கத்திற்கு எதிராக ‘பொய் பிரச்சாரத்தில்’ ஈடுபட்டு- தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம் என்று பழனிச்சாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.