ஜப்பானின் தய்சே நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் கோரப்பட்டதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
விசாரணைக் குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி குசலா சரோஜனி வீரவர்தனவினால் குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க, எஸ்.எம்.ஜி.கே. பெரேரா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
இந்த மூவரடங்கிய விசாரணைக் குழு கடந்த ஜூலை 22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
31.07.2022