பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினர். அந்நாட்டு இந்துக்கள் அரசுத் துறையில் குறைவாகவே பணியில் உள்ளனர். அதிலும், உயர் பொறுப்புகளுக்கு இந்துக்கள் தேர்வாவது கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மனிஷா ரூபேட்டா என்ற இந்து பெண் அந்நாட்டின் முதல் பெண் டிஎஸ்பியாக பதவியேற்றுள்ளார். பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்படுவது அரிதான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், அதிலும், இந்து பெண் ஒருவர் டிஎஸ்பியாக பதவியேற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மனிஷா ருபேட்டாவின் குடும்பம் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாகோபாத் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளது. மனிஷா ருபேட்டாவுக்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர். 13 வயதில் தந்தையை இழந்த பின்னர், மனிஷா ருபேட்டாவின் குடும்பம் கராச்சியில் குடியேறியுள்ளது.
மனிஷா ருபேட்டாவின் சகோதரிகள் தற்போது மருத்துவர்களாக உள்ள நிலையில், அவரது சகோதரரும் மருத்துவம் பயின்று வருகிறார். சகோதரிகள் போல மருத்துவம் படிக்க மனிஷா ருபேட்டா, அதற்கான நுழைவு தேர்வு எழுதியுள்ளார். ஆனால், ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் அவரது மருத்துவ கனவு கைநழுவிப் போயுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!
அதன்பிறகு காவல்துறையில் உயர் பதவிக்கான தேர்வை எழுதிய இவர், 468 பேரில் 16ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, சிந்து மாகாணத்தின் காவல் துணை கண்காணிப்பாளராக அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பியாக பதவியேற்றுக் கொண்டுள்ள மனிஷா ருபேட்டாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.