கேரளாவில் யூ டியூப் பார்த்து சிறுவன் தயாரித்த ஒயினை குடித்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மாநில அரசு பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவன், வீட்டிலிருந்த திராட்சைகளை கொண்டு, யூ டியூப் பார்த்து ஒயின் தயாரித்துள்ளார். பாட்டிலில் திராட்சைகளை அடைத்து ஒயின் தயாரித்து அதனை மண்ணில் புதைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை எடுத்து தனது நண்பனுக்கு சிறுவன் குடிக்க கொடுத்துள்ளான்.
அதைக் குடித்த சிறுவனுக்கு வாந்தியும், உடல் சோர்வும் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், சிறுவன் தயாரித்த ஒயினை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த ஒயினில் ஸ்பிரிட் அல்லது வேறு ஏதேனும் ஆல்கஹால் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
“விசாரணையின் போது, சிறுவன் தனது பெற்றோர் வாங்கிய திராட்சையை பயன்படுத்தி மது தயாரித்ததை ஒப்புக்கொண்டான். ஸ்பிரிட் அல்லது வேறு எந்த ஆல்கஹாலையும் மூலப்பொருளாக பயன்படுத்தவில்லை என்று அவன் கூறினான். மதுவை தயாரித்த பிறகு, அதை ஒரு பாட்டிலில் நிரப்பி, யூடியூப் வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி நிலத்தடியில் புதைத்ததாக சிறுவன் கூறினார். சிறுவன் மது தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்திருந்தும் அவனது தாயார் அதை பெரிதாக எடுத்து கொள்ளாததால் இந்த அளவிற்கு விவகாரம் வந்துவிட்டது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
சிறுவனின் செயலால் ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகள் குறித்தும் அவனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM