மும்பை: அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளான சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் ஏற்கெனவே கடந்த ஜூலை 20, 27 தேதிகளில் அனுப்பப்பட்டிருந்த சம்மன்களை ஏற்று ஆஜராகாத நிலையில் அவரது வீட்டிற்கே இன்று (ஜூலை 31) அமலாக்கத் துறை அதிகரிகள் சென்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை துணையுடன் சஞ்சய் ரவுத் வீட்டிற்கே சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை 7 மணிக்கு விசாரணையை தொடங்கினர்.
மும்பையில் உள்ள பிரபல சாவடியை மறுசீரமைப்பு செய்த விவகாரத்தில், ரவுத்தின் மனைவி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் பெயரில் நடந்துள்ள வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முன்னதாக, சஞ்சய் ரவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் மராட்டிய மொழியில் ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், “எனக்கு எந்த ஊழலிலும் தொடர்பு இல்லை. நான் இதை சிவ சேனா தலைவர் பால் தாக்கரே மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நான் சிவ சேனாவுக்காக தொடர்ந்து போராடுவேன். என் உயிர் போகும் நிலை வந்தாலும் கூட கட்சியை விட்டு நீங்க மாட்டேன். சரணடைய மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ராம் கதம், “சேனா தலைவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் சஞ்சய் ரவுத் ஏன் அஞ்சுகிறார். அவர் குற்றமற்றவர் என்றால் இரண்டு சம்மன்கள் அனுப்பப்பட்ட போதே ஆஜராகி இருக்கலாம் அல்லவா? பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்க முடிந்த அவருக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏன் போக நேரமில்லை” என்று வினவியிருந்தார்.
ரூ.1034 கோடி ஊழல்: மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ரவுத்திடம் கடந்த ஜூலை 1-ம் தேதி 10 மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரலில், சஞ்சய் ரவுத்தின் மனைவி, வர்ஷா ரவுத் மற்றும் அவருக்கு நெருக்கமான இருவரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை சுமார் ரூபாய் 11.15 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. இதில் தாதரில் உள்ள வர்ஷா ரவுத்துக்குச் சொந்தமான வீடு, மற்றும் அலிபாக் கிம் கடற்கரையில் உள்ள 8 இடங்கள் அடங்கும்.
சஞ்சய் ரவுத்துக்கும், பிரவின் ரவுத், சுஜித் பட்கருக்கும் இடையிலான தொழில் மற்றும் மற்ற தொடர்புகள் குறித்தும், அவரது மனைவியின் சொத்து விற்பனை தொடர்பாகவும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மும்பையில் உள்ள பிரபல சாவடியை மறுசீரமைப்பு செய்ததில் 1034 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் பிரவின் ரவுத் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..