மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3ஆவது நாளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக வெற்றிகளை குவித்தனர்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3ஆம் நாளில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஏ,பி,சி என 3 பிரிவுகளில் களம் இறங்கினர். ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் தங்களை எதிர்த்து விளையாடிய சுவிட்சர்லாந்து அணி வீரர்களான யான்னிக் மற்றும் நிகோ ஆகியோரை வீழ்த்தினர்.
அதே பிரிவில் விளையாடிய மற்ற இந்திய வீரர்களான சரின் நிகில், சத்வானி ஆகியோர் எதிரணி வீரர்களை தோற்கடித்தனர். இதனால், சுவிட்சர்லாந்து அணியை 4-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய பி அணி ஓயிட்வாஷ் செய்தது.
ஏ பிரிவில் விளையாடிய இந்திய வீரர்களான ஹரிகிருஷ்ண பென்டாலா, அர்ஜூன் ஆகியோர், கிரீஸ் வீரர்களான டிமிட்ரியோஸ், அதனசியோ ஆகியோரை வீழ்த்தி தலா ஒரு புள்ளியை பெற்றனர். அதே பிரிவில் விதித் சந்தோஷ், சசிகிரண் ஆகியோர் விளையாடிய போட்டிகள் டிராவில் முடிந்தன.
அதேபோல், இந்திய சி அணியில் விளையாடிய தமிழக வீரர் சேதுராமன், அபிஜித் ஆகியோர் ஐஸ்லாந்து வீரர்களை வீழ்த்தினர். மேலும், அதேபிரிவில் சூர்யா சேகர், அபிமன்யூ ஆகியோர் விளையாடிய போட்டிகள் சமனில் முடிவடைந்தன.
மகளிர் ஏ பிரிவில், விளையாடிய தமிழக வீராங்கனை வைஷாலி, பக்தி குல்கர்னி ஆகியோர் இங்கிலாந்து வீராங்கனைகளை தோற்கடித்தனர். கர்ப்பிணியான ஹரிகா துரோணவள்ளி, தனியா சச்தேவ் ஆகியோர் அதே பிரிவில் விளையாடிய போட்டிகள் டிராவில் முடிந்ததால் தலா அரை புள்ளிகள் வழங்கப்பட்டன.
மேலும், மகளிர் பி பிரிவில் விளையாடிய வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாத் ஆகியோர் இந்தோனேசிய வீராங்கனைகளை வீழ்த்தினர். அதேபிரிவில், பத்மினி, கோமேஸ் மேரி ஆன் விளையாடிய போட்டிகள் டிராவானது.
அதேபோல், சி பிரிவில், நந்திதா, பிரத்யூஷா ஆகியோர் ஆஸ்திரியா வீராங்கனைகளை வீழ்த்திய நிலையில், ஈஷா விளையாடிய போட்டி டிராவில் முடிந்தது.