30வது வருட திரைப்பயணத்தில் இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவர் திரையுலகத்தில் இயக்குனராக அறிமுகமாகி நேற்றுடன் 29 வருடங்கள் நிறைவடைந்து தற்போது 30வது வருடத்தில் நுழைந்திருக்கிறார். அவர் முதன் முதலில் இயக்கிய 'ஜென்டில்மேன்' படம் வெளிவந்து நேற்றுடன் 29 வருடங்கள் முடிவடைந்துள்ளது.

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக தன் திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தவர் ஷங்கர். அதன்பின் 'சூரியன்' படத்தை இயக்கிய பவித்ரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். அதன் பிறகு 'ஜென்டில்மேன்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் படத்திலேயே பெரிய வெற்றியைப் பெற்று திரையுலகை வியக்க வைத்தார்.

அதன் பிறகு அவர் இயக்கிய “காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளது. அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் 'பாய்ஸ்' படத்திற்கு மட்டுமே நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்தது. 'காதலன், நண்பன்' படங்கள் மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றது. மற்ற படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

ஹிந்தியில் அவர் இயக்கிய 'நாயக்' படம் தோல்விப் படமாக அமைந்தது. தமிழைத் தவிர அவர் வேற்று மொழியில் இயக்கிய ஒரே படம் 'நாயக்' மட்டும்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ராம்சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். 'காதல்' படம் மூலம் படங்களைத் தயாரிக்கவும் ஆரம்பித்தார். 'இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில், ஈரம்' ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் வெளிவந்த முக்கியமான படங்கள்.

பிரம்மாண்டமான படங்கள், அசத்தலான பாடல் காட்சிகள், வித்தியாசமான ஹீரோயிசம் என அவரது படங்கள் கடந்த 30 வருடங்களாக காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. ஒரு இயக்குனராக குறைந்த படங்களையே இயக்கியுள்ளார்.

அவர் ஆரம்பித்து இயக்கிய படங்கள் அவ்வளவாக பிரச்சினையில் சிக்கியதில்லை. ஆனால், அவரது இயக்கத்தில் ஆரம்பமான 'இந்தியன் 2' படம் இரண்டு வருடங்களாக பிரச்னையில் சிக்கியுள்ளது. அவர் தயாரிக்க ஆரம்பித்த 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படம் ஆரம்பத்திலேயே பிரச்னையில் சிக்கி நின்று போனது.

இன்று இந்தியத் திரையுலகத்தில் பிரம்மாண்டமான இயக்குனர் எனப் பெயரெடுத்த ராஜமவுலி கூட இயக்குனர் ஷங்கரின் படங்களைப் பார்த்துத்தான் பிரம்மாண்டத்தைக் கற்றுக் கொண்டேன் என்பதே ஷங்கரின் திறமைக்கான சான்று. இன்றைய பல இளம் இயக்குனர்களுக்கு முன்னோடியாக ஷங்கர் இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.