first monkey pox death in india:கேரளாவில் கவுன்ட் டவுனை தொடங்கி உள்ள குரங்கு அம்மை!

நீண்ட போராட்டத்துக்கு பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக உலக நாடுகள் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்த நிலையில், உலக மக்களின் துக்கத்தை கலைக்கும் விதத்தில் குரங்கு அம்மை எனும் வைரஸ் நோய் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.

இந்தியாவை இந்த அம்மை நோய் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரதத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் திருச்சூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபருக்கு சிகிச்சை அளித்ததில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கேரள சுகாதார துறை, இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன், இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் நபர் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது குரங்கு அம்மை நோய்க்கு முதல் பலியும் கேரளாவில்தான் நிகழ்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.