சென்னை திருமங்கலத்தில் இயங்கிவரும் ஒரு கால் சென்டரின் பணியாற்றும் ஊழியர்கள் 4 பேர், ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியான தகவலில், அசோக் என்பவர் செல்போன் லோன் ஆப் மூலம் ரூ 8.5 லட்சம் கடன் வாங்கியதாகவும், அவர் கடனை சரியாகத் திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
இவர் போன்ற வாடிக்கையாளர்களை கையாள அந்த நிறுவனம் வாடிக்கையாளரின் செல்போனை ஹேக் செய்து, அவர்களின் contact list -ல் உள்ள நபர்களை அழைத்து, அந்த நபர் தொடர்பாக விசாரிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. எனவே, அதேபாணியில் அசோக் என்ற வாடிக்கையாளரின் செல்போனை குற்றம்சாட்டப்பட்ட கால் சென்டர் ஊழியர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும், செல்போனில் உள்ள நம்பர்களுக்கும் தொடர்ந்து அழைத்து பேசியுள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் அழைத்தவர்களில் ஒருவர் ஆந்திர விவசாயத்துறை அமைச்சர் ககானி கோவர்த்தன ரெட்டி. ஆந்திர அமைச்சருக்கு ஒரு மணி நேரத்தில் 50 முறைக்கும் மேலாக அழைத்து கடன் தொடர்பாக விசாரித்துள்ளனர். இதனால் எரிச்சல் அடைந்த ஆந்திர அமைச்சர் நெல்லூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஆந்திர காவல்துறை விசாரித்ததில் சென்னை திருமங்கலத்தில் இயங்கும் கால் சென்டரிலிருந்து தான் அமைச்சருக்கு அழைப்பு வந்ததை கண்டுபிடித்துள்ளது.
உடனே சென்னை விரைந்த காவல்துறை கால் சென்டர் ஊழியர்கள் 4 பேரைக் கைது செய்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் பிற உபகரணங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சைபர் கிரைம் போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.