சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ் (53), சினிமா கேமரா மேனாக வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மகள் அரிதா ராஜேஸ்வரி (25), கல்லூரி படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அரசு தேர்வுகளை எழுதி வந்தார். வீட்டில் மாணவர்களுக்கு டியூசனும் எடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல தூங்க செல்வதாக அறைக்குச் சென்ற அரிதா ராஜேஸ்வரி, நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த அவரின் குடும்பத்தினர் அரிதா ராஜேஷ்வரியின் அறைக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது அவர், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், அவரை கீழே இறக்கி பார்த்தனர். அவர் உயிரிழந்தது தெரியவந்ததையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் தலைமையிலான போலீஸார் இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிதா ராஜேஸ்வரி தற்கொலை தொடர்பாக அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட அறையை போலீஸார் சோதனை செய்தபோது இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது குறித்துப் பேசிய போலீஸார், “தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், `கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் வீட்டுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. எனவே என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினோம். மேலும் அவர் அடிக்கடி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருடன் பேசி வந்தது தெரியவந்தது. பட்டதாரி பெண்ணின் ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தியபோது, `நானும் அரிதா ராஜேஸ்வரியும் பழகி வந்தோம்.
நான் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறேன், கடன் சுமையும் இருந்ததால் என்னால் கடந்த சில தினங்களாக அரிதா ராஜேஸ்வரியுடன் மனம்விட்டு பேச முடியவில்லை. சில தினங்களுக்கு முன்புகூட அவர் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாங்கள் இருவரும் பழகுவது அரிதா ராஜேஷ்வரியின் குடும்பத்தினருக்கு தெரியும்’ என்று தெரிவித்தார். அதனடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனையில் அரிதா ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர். பிரேத பரிசோதனைக்குப்பிறகு அவரின் குடும்பத்தினரிடம் சடலத்தை ஒப்படைத்துவிட்டோம். சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 -தேர்வைகூட அரிதா ராதாகிருஷ்ணன் எழுதியிருந்தார்” என்றார்கள்.