கடந்த சில தினங்களாக, அண்டை நாடான இலங்கைக்குச் சீனாவின் உளவுத்துறை கப்பல் ஒன்று வருவதாகச் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், தற்போது அந்தக் கப்பல் வருவதை இலங்கை ராணுவம் உறுதி செய்திருக்கிறது. எதற்காக அந்த உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகிறது… இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இலங்கையில் முகாமிடும் சீனக் கப்பல்!
ஜூலை 13-ம் தேதி அன்று சீனாவிலிருந்து கிளம்பிய `யுவான் வாங் – 5′ என்ற உளவுக் கப்பல் தைவான் நாட்டைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலேயே, இந்தக் கப்பல் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்ற தகவல்கள் வெளியானது. அப்போதே இது தொடர்பாகக் கவலை தெரிவித்திருந்தது இந்தியா. ஆனால், அப்போது இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்த இலங்கை அரசு, இப்போது அந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
ஜூலை 30 அன்று, சீனக் கப்பலின் வருகையை உறுதி செய்திருக்கிறார் இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேணல் நளின் ஹெராத். இது தொடர்பாக அவர், “இலங்கை கடற்பரப்பைக் கடந்து செல்ல, பல நாடுகளின் வர்த்தக, ராணுவக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல, சீனாவின் ‘யுவான் வாங் – 5’ ஆராய்ச்சிக் கப்பலை, இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பல் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை அம்பாந்தோட்டையில் நிறுத்தி வைக்கப்படும். அங்கிருந்து செயற்கைக்கோள் கட்டுப்பாடு குறித்த ஆராய்ச்சிகள், இந்தக் கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இலங்கை அரசு இந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்கியதால், மத்திய அரசு கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சீனாவின் இந்த `யுவான் வாங் – 5′ உளவுக் கப்பல், 750 கி.மீ தூரம் வரையிலுள்ள பகுதிகளை உளவு பார்க்கும் எனச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலுள்ள சில முக்கிய இடங்களையும், ஆந்திரா, கேரளாவின் கடலோரப் பகுதிகளையும் இந்தக் கப்பல் உளவு பார்க்க வாய்ப்பிருக்கிறது. தென்னிந்தியாவிலுள்ள ஆறு துறைமுகங்களை இந்தக் கப்பல் உளவு பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
சீனக் கப்பலின் உண்மையான நோக்கம் தொடர்பான தகவல்களை மத்திய பாதுகாப்புத்துறை சேகரித்துவருவதாகத் தெரிகிறது. மேலும், இந்தக் கப்பல் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்தும் மத்திய அரசு வட்டாரத்தில் பல விவாதங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, தென்மாநிலங்களைக் கவனமாக இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கைக்கு நெருக்கடி!
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த முடிவு, அந்த நாட்டுக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “சீனக் கப்பலின் வருகையைத் தடுத்து நிறுத்த இந்தியா எடுத்த முயற்சிகள் வீண் போய்விட்டன. இலங்கை, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளக் கடன் வழங்கியதோடு, பல்வேறு உதவிகளையும் செய்தது இந்தியா மட்டுமே. இருந்தும், இந்தியாவைப் பகைத்துக்கொள்ளும் வகையில் இப்படியான காரியத்தைச் செய்திருக்கிறார் ரணில். அதிபர் தேர்தலில் இந்தியா தன் பக்கம் நிற்கவில்லை என்பதால்தான், ரணில் சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும்.
சீனா அழுத்தம் கொடுத்தால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு நிதியுதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தியாவிடமிருந்து இனி உதவிகள் கிடைப்பது சந்தேகமே. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இந்த விவகாரத்தில், ரணில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். இனிதான் அவருக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன” என்கின்றனர்.
சீனக் கப்பல் விவகாரத்தில், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!